வெள்ளி, 8 நவம்பர், 2024

கனிதரு சிறுமரம்



யானொரு தனிமரம் 
வேண்டிட மழை வரும் 

துணைவரும் தோப்பினில் 
யானொரு தனிமரம் 
 
அடைந்திடும் பறவைகள் 
சுவைத்திட கனி தரும் 
யானொரு தனிமரம் 

விதையிடு பறவையோ 
பறந்தது தூரமோ 
விளைத்தவர் வேறொரு 
மரத்தடி தூக்கமோ 

யானொரு தனிமரம் 
காற்றது தழுவிடும் 
சுவைத்திடும் தோப்பினில் 
யானொரு தனிமரம் 

இலையுதிர் காலமோ 
இறைந்தவை பறந்திட 
பதைப்புகள் நீளுமோ
கலைக்குமென் தூக்கமோ 


அங்கங்கு தனிமரம் 
துணையிலை அருகிலே 
துளைத்திடும் கேள்வியில் 
நின்றிட மழைவரும்
துளைத்திடும் கேள்விகள்
வெடித்திட மழைவரும் 


கடந்திட நடப்பவர் 
கைகளில் பறித்தவை 
கிடந்திட கொதிப்பனோ? 
நன்றிகள் கேட்பனோ?

மழைவர நனைகிறேன் 
வெயில்பட காய்கிறேன் 
என் நிழல்படு தரையினில் 
எனக்கொரு நிழலிலை 

மரமோ நீயென பிறர்
கடிபவர் நியாயமா?
மூச்சிழக்க கட்டையா?
உரைத்தலும் முறைதானோ?

கல்லெறி கைபடு 
நாபட சுவைக்கட்டும் 

காற்றிடம் தலையாட்டி 
வெயிலுடன் ஒளிச்சேர்த்து 
யென் மகரந்த சேர்க்கையை 
பிறர் சுவைத்திட 
தலைப்படும்
யானொரு தனிமரம் 


யானொரு தனிமரம்  
கனிதரு சிறுமரம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

செல்ல(லும்) கவிதை

குழந்தை மொழிகள் கேட்க  பெரும் கவலை ஓடும் தூரம்  மொழிகள் எல்லாம் தேடும் ஒரு மழலைப்  பேச்சின்  வாசம் விழிகள் பாதி பேசும்  விரல்கள் கோர்த்து பே...